உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்

பொதுவான குறிப்புகள்

எல்லா ஜீவராசிகளின் உடலிலும் இறைவன் உள்ளான். மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனிதஜீவன் சிறப்புடையது. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. பிறந்தாலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது என்பது சான்றோர் வாக்கு. இந்த அரிதான மானுட உடல் என்கிற வாடகை வீடு நல்ல நிலையில் உள்ள வரை இறைவன் இதில் குடியிருப்பான். சற்றே பழுதானாலும் வேறு வாடகை வீட்டில் குடிபுகுவான். எனவே நம் உடலை பழுதில்லாமல் நல்ல நிலையில் பாதுகாத்து இறைவனை நம்முடனே இருக்கச் செய்தல் வேண்டும். நட்டகல்லும் பேசுமோ, நாதன், உள்இருக்கையில் என்பது சிவவாக்கியர் வாக்கு.

நம்முன்னோர்கள் தேர்ந்த அனுபவத்தில் பின்வரும் சந்ததியினருக்கு பயனுள்ள பல பழமொழிகளை, நமது உடலை பாதுகாக்கும் பொருட்டு கூறியுள்ளார்கள். அவற்றில் சில.

அ) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

ஆ) வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.

இ) கந்தையானாலும் கசக்கிக்கட்டு

ஈ)  கூழானாலும் குளித்துக்குடி.

உ) நொறுங்கத்தின்றால் நூறு வயது.

ஊ)  ஆக்கப் பொறுத்ததே, ஆறப்பொறு.

 எ)    பசித்தபின் புசி, சுத்தம் சுகம் தரும்.

 ஏ)  இடையில் குடியேல் கடையில் மறவேல் (உண்ணும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது. உண்டு முடித்தபின் நீர் அருந்த மறக்கக் கூடாது).

 ஐ)  உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு. (அளவில்லாமல் அதிகம் உண்பதால் உடல்பருக்கும்).

 ஒ) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.

பசித்திருப்பவர், உழைத்திருப்பவர், வேர்வையில் நனைபவர் இம்மூவருக்கும் நோய்கள் வராது.

ஒரு வேளை உண்பவன் யோகி, இரண்டு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி என்பர்.

நமது இருதயம் 1 நாளைக்கு 1,03,689 முறை துடிக்கிறது உடலில் உள்ள இரத்தம் ஒரு நாளைக்கு 16,80,00,000 மைல் தூரம் பயணம் செய்கிறது என்று மேலை நாட்டவர் கூறுகின்றனர்.

தேவைக்கு புசிக்கவேண்டும். பசித்த பின் புசிக்க வேண்டும். வாழ்வதற்காக உண்ணவேண்டும். உண்பதற்காக வாழக்கூடாது.

“திண்ணமிரண்டுள்ளே, சிக்கவடக்காமற்

பெண்ணின் பாலொன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால்

நீர்சுருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்பார்தம்

பேருரைக்கில் போமேபிணி”                                                                    – தேரையர்வாக்கு

மலநீரை அடக்காமலும், மிக்க உடலுறவு கொள்ளாமலும், தண்ணீரை கொதிக்க வைத்தும், தயிரை விடுத்து, மோரைப் பெருக்கியும், வெண்ணெய் விலக்கி நெய்யாக்கியும் உட்கொண்டு வந்தால் நோயின்றி வாழலாம் என்பது மேலே உள்ள பாடலின் பொருள்.

குளிக்கும் முறை

கோடையானாலும், குளிர்காலமானாலும் எப்போதும் மிதமான சுடு நீரில் குளித்தல் சருமத்திற்கு நல்லது.

ஆண்கள் கௌபீனம் அணிந்து குளிக்க வேண்டும். ஜட்டியுடன் ஒரு போதும் குளிக்கலாகாது. அக்குள், கவுட்டி இவைகளை நன்கு தேய்த்தும், விதைகளின் தோலையும், ஆண் உருப்பின் தோலையும் நீக்கி இருவிரல்களால் நீவிவிட்டு தேய்த்து அழுக்கினை போக்க வேண்டும். இதன் பின்னர் ஆயுர்வேத முறையில் தயாரித்த சோப்பினை முதலில் கவுட்டி அக்குள், ஆண் உருப்பு இவைகளில் தேய்த்து பின் உடம்பின் மற்ற பாகங்களில் தேய்த்து அதன் பின் குளிக்க வேண்டும். ஆண்கள் கை வைத்த பணியன்கள் போடுவதையும், ஜட்டி அணிவதையும் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் பலர் உள்ளாடைகளுடன் குளிக்கின்றனர். இது சரியில்லை. அவர்கள் வெற்றுடம்புடன் மறைவான அறையில் மேலே கூறிய முறைப்படி உடல்பாகங்களை தேய்த்துக் குளிப்பதுடன் ஆசனவாய்களையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். அண்டர்வேர், பனியன், உள்பாடி, உள்பாவாடை இவைகளை தினசரி சோப்பு போட்டோ அல்லது சோப்பு பவுடரில் ஊறவைத்தோ துவைத்து மறுநாள் துவைத்த ஆடைகளையே பயன்படுத்த வேண்டும். மேலாடைகளை 2 நாட்களுக்கு மேல் அணியலாகாது.

பிரசவம் ஆன பெண்கள் குழந்தை பிறந்த உடனே ஈரத்துண்டை நன்கு பிழிந்து தொடர்ந்து 3 நாட்கள் வயிற்றின் மேல் கட்டி வந்தால் வயிற்றுத் தோல் சுருங்கி இயற்கையான நிலைக்கு வரும். கிராமத்துப் பெண்கள் இன்னும் இதைக் கடைப்பிடிப்பதால், வயிறு பெரிதாகத் தெரிவதில்லை. நகரத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலோரின் வயிறு பெரிதாகவே காணப்படும். மஞ்சள் அறைத்து வயிற்றில் பூசிக் கொள்வாரும் உண்டு. இக்காலப் பெண்கள் பலரும் தொப்புள் தெரிய சேலை கட்டுகிறார்கள். இதனால் மேல் வயிறு கீழே தொங்கி தொப்பை விழ ஏதுவாகிறது என்பதை பெண்கள் உணர வேண்டும்.

குடிநீர் அருந்தும் முறை

குடிக்கும் தண்ணீர் மூலம் பல வியாதிகள் வருகின்றன. சளி, காய்ச்சல், காலரா சரும நோய் போன்றவை. ஒருவர் தினமும் ஒரு லிட்டர் முதல் 11/2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். முதல் நாள் இரவு துணியை 4 மடிப்பில் வடி கட்டிய தண்ணீர் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ற அளவு நன்கு காய்ச்சி வைத்து மறுநாள் உபயோகப்படுத்த வேண்டும். இடம் மாறினாலோ, வெளியூர் சென்றாலோ அங்கங்கு நன்கு காய்ச்சிய தண்ணீரைப்பருக வேண்டும். வெளியில் சென்று வீட்டிற்கு வியர்க்க வந்ததும் பானைத் தண்ணீரை அருந்த சளிபிடிக்கும், தொடர்ந்து காய்ச்சல் வரும்.

கடைகளில் விற்கும் குளிர்பானங்களை பருகுவதன் மூலம் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும். கொதிக்க வைத்த தண்ணீர் சூடாக இருக்கும் போதே துளசி இலைகள், கற்பூர வல்லி இவைகள் கல்யாண முருங்க இலைகளைப் போட்டு 6 மணி நேரம் கழித்து வடி கட்டிய தண்ணீரைப் பெரியவர்கள் முதல் குழந்தைகள் உள்படப் பருகி வர சளி பிடிக்காமல் இருக்கும்.

உணவு சமைக்கும் முறையும் உண்ணும் முறையும்

எந்த உணவானாலும் சுடச்சுடசாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குளிர் காலத்தில் மிதமான சூட்டில் சாப்பிடலாம் அன்று சமைத்த உணவை அன்றே சாப்பிடவேண்டும். குழம்பு பொரியல், கூட்டு மிகுந்ததை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் உண்பதை அடியோடு தவிர்க்க வேண்டும். கீரை, மோர், தயிர் இவற்றை இரவில் உண்ணக் கூடாது. உணவில் எப்போதும்,உப்பு,புளி காரம் சற்று குறைவாகவே பயன்படுத்த வேண்டும். தயிரை மதிய உணவில் சாப்பிடுவதை தவிர்த்து மோராக்கியே சாப்பிட வேண்டும்.

காலை, மதியம், இரவு ஒரு குறிப்பிட்டகால கட்டத்தில் உண்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். வேளை தவறி உண்பதால் குடற்புண் வர வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். சிலர் சாப்பிட்டதும் பல்குத்தும் பழக்கம் வைத்துள்ளனர். இப்படி செய்தால் பற்களின் ஈறுகள் பலம் குன்றுவதுடன் பற்களில் சந்து உண்டாகி உணவுத்துகள்கள் தங்கிவிடும். ஈறுகள் வீங்கி வலி உண்டாகும். இரவு உணவுக்குப்பின் 1 மணி நேரம் கழித்தே உறங்க வேண்டும். சாப்பிட்டதும் 50 அடிதூரமாவது நடைப்பழக வேண்டும். சமையலில் பொறிக்கும் அல்லது வறுக்கும் பதார்த்தங்களில் அதிகம் எண்ணெய் சேர்க்காமல் இருப்பது நல்லது. அப்படி சேர்த்தால் கொழுப்பு சத்து அதிகமாகி இரத்தக் குழாயில் படிந்து அடைப்பு உண்டாகும். மாரடைப்பு வரும்.

மீன், கோழி இவற்றை இளங்காரமாக அதிக மசாலா சேர்க்காமல் குழம்பு வைத்து சாப்பிடலாம். ஆனால் எண்ணெயில் வறுத்ததை தவிர்க்க வேண்டும். ஆட்டுமாமிசத்தில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளதால் அதை குறைவாக உண்ண வேண்டும். “நெய்யில்லா உண்டிபாழ்” என்பது பழமொழி. எனவே மதிய உணவில் 10 சொட்டு நெய்யாவது அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் போது உட்கார்ந்து கொண்டுதான் சாப்பிட வேண்டும்.

உடல்நலம் காக்கும் முறை

கணவன் மனைவி அடிக்கடி உடலுறவு கொண்டால் உடற்கட்டு குலைந்துவிடும். பெருந்தவவலியும் குன்றும் சுக்கிலம் கழிந்ததாலே, என்பதும் விந்து விட்டையோ நொந்து விட்டையோ என்பதும் ஆன்றோர் வாக்கு. ஆண்கள் 50 வயதுக்குப் பிறகும் பெண்கள் 40 வயதுக்கு பிறகும் உடலுறவு கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஆண்களுக்கு 15 வயது முதலே பாலுணர்வு உண்டாகிறது. இது இயற்கை. பல இளைஞர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தாமல் கையினால் சுயஇன்பம் காண்கின்றார்கள். இது மிகவும் கொடிய பழக்கம் இதை அடிக்கடி செய்வதால் ஆண் உறுப்பு சிறுத்துப் போவதுடன், விந்தும் நீர்த்துப் போய்விடும். ஆண்மை வீரியம் குறையும். திருமணம் செய்து கொள்பவர்கள் (மேலே உள்ள பழக்கத்தினால்) உடல் உறவு கொள்வதில் தோல்வி கண்டு அதனால் பெண்ணுக்கு போதிய திருப்தி இல்லாமல் கணவன்-மனைவி இடையே உள்ள உறவில் விரிசல் உண்டாகி விவாகரத்து வரை கொண்டு போய்விடும். சில குடும்பப் பெண்கள் வழிமாறி செல்வதும் உண்டு.

இதை இளம் வயது வாலிபர்கள் உணர வேண்டும். ஆண்மை சக்தியை இழந்து விட்டு விளம்பரங்களை பார்த்து அதன் மருந்தை நாடிச் செல்வதை தவிர்க்க வேண்டும். விந்து நீர்த்துப் போகாமல் இருக்க 7 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்வது நலம். ஆண், பெண் இருவரும் உறுப்புப்பகுதியில் உள்ள முடிகளை அவ்வப்போது மழித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அழுக்கு சேர்ந்து அரிப்பு உண்டாகும். அமாவாசை தினத்தன்று உடல் உறவு கொண்டால் அதனால் உண்டாகும் குழந்தை அங்க கீனமாகப் பிறக்கும் என்று கூறுவாறும் உள்ளனர்.

தூங்கும் முறை

இடப்பக்கமாக ஒருக்களித்து உறங்க சோர்வு நீங்கும் உடல்வலி குறையும், சோர்ந்த மனதிற்கு உற்சாகம் பிறக்கும். ஆயுள் விருத்தியுண்டாகும். இரத்தம் மற்றும் விந்து விருத்தியாகும். இலவம் அல்லது பருத்தி பஞ்சுமெத்தையில் உறங்க உடல் சூடுதணியும் குளிர்ச்சியைத் தரும். நன்கு உறக்கம் வரும். கோரைப்பாயில் படுத்துறங்க சுரத்தின் வேகம் குறையும். கழுத்து வலி உள்ளவர்கள் குறைந்த உயரமுள்ள தலையணையைப் பயன்படுத்த வேண்டும்.

உடற்பயிற்சி

நமது உடல் குறிப்பிட்ட வயது வரை நன்றாக இருக்கிறது. வயது ஆக ஆக உடல் உறுப்புகள் செயல் திறன் குன்றி அதனால் பல வியாதிகளும் நோயும் வருகிறது. இதனை சரி செய்ய மருந்துகளை நாடிச் செல்கின்றோம். இதனை தவிர்க்க வேண்டுமென்றால் 50 வயதுக்கு மேல் எளிதில் சீரணிக்கக் கூடிய உணவுகளை அளவோடு உண்டு வரவேண்டும். 25 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் காலை அல்லது மாலை 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. இதனால் இரத்த ஓட்டம் சீரடைகிறது.

40 வயதுக்கு மேல் 50 வயதுக்குள்ளவர்கள் 1 மணி நேரமாவது வேகநடைப் பயிற்சி செய்வது நல்லது.

 50 வயதைக் கடந்தவர்கள் 45 நிமிட நேரம் சாதாரண நடைப்பயிற்சி செய்வது கட்டாயமாகும்.

இதனை அனைவரும் ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

காலையில் பித்தம் மாலையில் இரத்தம் என்று ஒரு பழமொழி உள்ளது.

காலை வெயிலில் நடைபயிற்சி செய்தால் உடலில் பித்தம் அதிகமாகும். ஆனால் காலை சூரிய உதயத்திற்கு முன்னால் நடைப்பயிற்சி செய்யலாம். மாலையில் நடைபயிற்சி செய்தால் மாலையின் சூரிய சக்தி இரத்தத்தை விருத்தி செய்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் நடைப்பயிற்சி செய்வதால் சர்க்கரையின் அளவு குறையும்.

Scroll to Top