கீரைகள்

பொதுவாக எல்லாக் கீரைகளாலும் நல்ல பலனுண்டு. இரும்புச் சத்துள்ளது. கீரைகளைப் பயன்படுத்து முன் சுத்தம் செய்ய வேண்டும். பழுப்புகளை நீக்க வேண்டும். முற்றிய நரம்புகள் இல்லாமல் ஆயவேண்டும். இலைகளின் அடிப்பாகத்தில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அவை நோயால் தாக்கப்பட்டவையாகும். அவைகள் நுண்கிருமிகளின் முட்டைகள் ஆகும். அதுபோன்ற கீரைகளைப் பயன்படுத்தினால் வயிற்றுப் போக்குண்டாகும்.

அகத்திக்கீரை

வேகாமல் கெட்டது அகத்தி என்பர், பருப்புடன் சாம்பார் செய்தோ, வெங்காயத்துடன் துவட்டல் செய்தோ சாப்பிடலாம். சிறுகசப்பாக இருக்கும் நன்றாக வெந்தால் சுவையாக இருக்கும். பித்த நோய் குணமாகும். உணவை எளிதில் சீரணிக்கச் செய்யும். வயிற்றில் உள்ள சிறு பூச்சிகளை சாகடிக்கும். தேக உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெறும். அதிகம் உண்டால் வயிற்றுப் போக்கு உண்டாகும். குடற்புண்களை ஆற்றும் வாரம் ஒருமுறை உண்ண வேண்டும். மிளகு, தக்காளி, சீரகம், பூண்டு வைத்து பிடி இலைகளைப் போட்டு சூப் வைத்து ரசத்தை பருக இரத்தக் கொதிப்பு அடங்கும்.

அரைக்கீரை

இதைக் கடையல் செய்து சாப்பிட காய்ச்சல், சன்னி, கபம் நீங்கும். வாதநோய், உடல்நடுக்கம் குணமாகும். பசியைத் தூண்டும். உடல் வலுப்பெறும். தாது விருத்தியுண்டாகும். நலிவுற்ற உடலுக்கு வலுவும் பலமும் உண்டாக்கும். வாரம் ஒரு முறையாவது உண்ண வேண்டும்.

ஆறாக்கீரை (அல்லது) ஆரைக்கீரை

இது மருந்துவத்துக்கு மட்டுமே பயன்படும் நோய்களைத் தவிர, இதர மருந்துகளை உண்ணுங்காலத்தில் இதை சாப்பிடக் கூடாது.

காசினிக்கீரை

பருப்புடன் வேகவைத்து கடையல் செய்து சாப்பிட சிறுநீரக கோளாறுகள் நீங்கும். இரத்தத்தை சுத்தி செய்யும். தை, மாசி மாதங்களில் கிடைக்கும். :

கொத்தமல்லிக்கீரை

பித்தம் குறையும். ரசத்தில் போட்டு செய்வர் குழம்பு போல் தாளிதம் செய்து சட்னியாக தொட்டுக் கொள்ளலாம். வதக்கி புளி, உப்பு, மிளகாய் சேர்த்து தொக்கு செய்தும் உண்பர். குடற்புண் ஆற்ற வல்லது உஷ்ணம் குறையும் வாந்தி, வயிற்று போக்கு குணமாகும்.

கருவேப்பிலை

குழம்பு, பொரியல், ரசம், கூட்டு தாளிதம் செய்ய பயன்படுத்துவர். இதையும் கொத்தமல்லிபோல் குழம்பாகச் செய்தும், தொக்கு செய்தும் உண்ணலாம். உடல் வலுவடையும், பித்தத்தை நீக்கும் சாப்பிடும் போது பக்கத்தில் ஒரு கொத்து வைத்துக் கொண்டால் ஈக்கள் வராது.

காசரைக்கீரை

இதை புளிச்சக்கீரை என்று அழைப்பார்கள் அரைக்கீரைகடையும் போது புளி, தக்காளிக்கு பதில் இதை சேர்த்து கடையல் செய்து சாப்பிடலாம். இரும்புச் சத்து அதிகம். புளிப்பாக இருக்கும் சிகப்பு நிற புளிச்சக்கீரையை கடையல் செய்துண்டு வர நரம்புத் தளர்ச்சியுண்டாகும். உடல் பலம்பெறும். கோடையில் சாப்பிட உடலைக் குளிர்ச்சியாக்கும். ஆனால் மலத்தை இறுக்கும்.

சிறுகீரை

பருப்புடன் கடையல் செய்து உண்ணலாம். சிறுநீரைப் பெருக்கும். நீர்க்கோவை, கண் நோய், வாயு, பித்தம் நோய்களை குணப்படுத்தும். சோகையைப் போக்கும். மருந்து சாப்பிடுங் காலத்தில் இதை உண்ணலாகாது.

தண்டுக்கீரை

கீரைகளை மட்டும் பறித்து பருப்புடன் கடையல் செய்து சாப்பிடலாம். உடல் பலம் பெறும். இதன் தண்டுகளை நார்நீக்கி துண்டுகளாகி நறுக்கி தட்டைப் பயறு சேர்த்து குழம்பாக்கி சாப்பிட உடல் இளைக்கும்.

தும்பைக்கீரை

இலைகளைப் பறித்து பருப்புடன் கடையல் செய்து சாப்பிடலாம். சளி, கபம் குறையும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். புன்செய் நில வரப்புகளிலும், ரோட்டு ஓரங்களிலும், புன்செய் நிலங்களிலும் கிடைக்கும்.

பசலைக்கீரை

இவற்றில் கொடிப்பசலை, குத்துப்பசலை தரைப்பசலை என மூன்று வகை உண்டு. மிதவெப்பம் மற்றும் நீர்பிரதேசங்களில் கிடைக்கும். பருப்பு கூட்டி கடையல் செய்து சாப்பிடலாம். 1  கைப்பிடி எடுத்து 1/4 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி 50 மில்லியாக சுண்டியவுடன் வெறும் வயிற்றில் காலை மாலை கஷாயத்தைப் பருக நீர்கடுப்பு, நீர்அடைப்பு, நீங்காத மேக பித்தம் ஆகியவற்றை குணமாக்கும். அடிக்கடி சமைத்துண்ண மூத்திர நோய், ரத்தப் பித்தம், சரும நோய், சீதபேதி இவற்றை குணமாக்கும். தாம்பத்ய பலவீனத்தைக் குறைக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். கல்லீரல், மண்ணீரல் பலம் பெறும்.

“நீர்க்கடுப்பு, நீரடைப்பு, நீங்காத மேகமுமிவ்

ஊர்க்கடுத்து ஓடுங்காண்” – சித்தர் பாடல்.

கர்ப்பிணிப் பெண்கள் கால் வீக்கத்திற்கு கஷாயம் செய்து சாப்பிட வீக்கம் வாடிவிடும். சுகப்பிரசவத்திற்கு மேலானது. ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.

பாலைக்கீரை

பருப்புடன் கீரையை வேக வைத்து கடையல் செய்து சாப்பிட பித்தம் நீங்கும். உடல் குளிர்ச்சிபெறும். பலம் கூடும்.

பருப்புக்கீரை  

பருப்புடன் வேக வைத்து கடையல் செய்து சாப்பிடலாம். வெட்டை நோய் குணமாகும். இரத்தம் சுத்தமாகும். மலச்சிக்கலை நீக்கும். கல்லீரல், மண்ணீரல், சிறு நீரகம் இவற்றின் கோளாறுகளை நீக்க வல்லது.  

மணித்தக்காளிக்கீரை

இதை மிளகுத்தக்காளி என்றும் கூறுவர். கீரை, வெங்காயம், சீரகம், பூண்டு, தக்காளிப்பழம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து சாப்பிட வாய்வுத் தொல்லைகள் நீங்கும். பாசிப்பயிறு சேர்த்து கடையல் செய்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வாய்ப்புண், தொண்டைப்புண், குடற்புண்கள் இவைகளை குணமாக்கும். தொடர்ந்து சாப்பிட கருச்சிதைவு ஏற்படாது. மாதவிடாய்க் கோளாறு நீங்கும், புற்று நோய், ஈரல் நோய் வரட்டு இருமல் ஆகியவற்றைக் குணப்படுத்தும் நினைவாற்றலைப் பெருக்கும் வயிற்றுவலியைக் குறைக்கும் வெள்ளை ஒழுக்கு நிற்கும் மூலத்தில் இரத்தம் வருவதை நிறுத்தும், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். இதன் பழங்களை உலரவைத்து இருப்புவைத்து வத்தல்குழம்பு செய்து சாப்பிட உடல் வலி நீக்கும்.  களைப்பைப் போக்கும், இக்கீரையை வாரத்தில் 2 அல்லது 3 நாள் சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

முருங்கைக்கீரை

இதை கீரைகளின் அரசி என்பர். மணித்தக்காளிப் போலவே இக்கீரையும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. அதிகம் வேகவைத்தால் கசக்கும். அதனால் ‘வெந்து கெட்டது முருங்கை’ என்பர். பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தும், கடையல் செய்தும் சாம்பார் செய்தும் துவட்டல் செய்தும் உண்ணலாம். உடல் வலிமை பெறும் பித்தம் குறையும். கண்நோய் மற்றும் தலை நோய் வராது மயக்க மாகி மூர்ச்சித்து இருப்பவர்களுக்கு நல்லது ஆண்மை அதிகரிக்கும் தேகம் பளபளப்புண்டாகும். அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

முளைக்கீரை

பூண்டு, புளி சேர்த்து கடையல் செய்தும், பருப்புடன் சேர்த்து கடையல் செய்தும், துவட்டல் செய்தும் உண்ணலாம். குடற்புண்களை ஆற்றும், பித்தத்தைக் குறைக்கும், மலத்தை இளக்கும். இரத்தம், தாது விருத்தியுண்டாகும். உடலுக்கு வலிமை சேர்க்கும்.

முடக்கொற்றான் கீரை

இக்கீரை மூலிகை மருத்துவத்தில் முக்கிய பங்கு பெறுகிறது.

“சூலைப் பிடிப்பு சொறி சிரங்குவன் கரப்பான்

காலைத் தொடு வாய்வும் கன்மலமும் – சாலக்

கடக்கத்தானோடி விடும் காசினியை விட்டு

முடக்கற்றான்தன்னை மொழி” – சித்தர் பாடல்

இக்கீரையை ஆய்ந்து தண்ணீரில் சுத்தம் செய்து இறுத்து ஒரு பிடி அல்லது இரண்டு பிடி எடுத்து இட்லி மாவுடன் சேர்த்து அரைத்து பெருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு காரம் சேர்த்து, தோசையாக வார்த்து சாப்பிட வாதநோய், மூட்டுவலி, சொறி சிரங்கு, சூலைப்பிடிப்பு, உடல்வலி ஆகிய பிணிகளை அகற்றும் அடிக்கடி சாப்பிடலாம்.

மூக்கிரட்டைக் கீரை

இவைகளை வேகவைத்து நெய்யில் வறுத்து சாப்பிட காமாலை, வீக்கம், குன்மம், வயிற்று இரைச்சல் ஆகிய பிணிகளை அகற்றும். கறி செய்துண்ண மலச்சிக்கல் தீரும். பருப்புடன் சேர்த்து கடையல் செய்துண்டுவர தேகம் காந்தி பெறும்.

வெந்தயக்கீரை

பருப்புடன் கடையல் செய்து சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும். பசியின்மை இருமல் குணமாவதுடன் சிறுநீர் எரிச்சல் குணமாகும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றும் குணமுடையது.

வாதநாராயணன் கீரை

இலைகள் உறுவி பருப்புடன் சேர்த்து கடையல் செய்து உண்டுவர வாத நோய்கள் குணமாகும்.

வேளைக் கீரை

இதில் வெள்ளைப்பூ பூக்கும் செடியின் இலைகளைப் பறித்து புளிசேர்த்து குழம்பு வைத்து சாப்பிட வாய்வுப் பிடிப்பு நீங்கும். பித்தம் குறையும், உடல் வலி நீங்கும்.

பொன்னாங்கன்னிக் கீரை

இக்கீரையின் மருத்துவ குணம் மிகச் சிறப்புடையதாக உள்ளது.

“காசாம்புகைச் சல் கருவிழி நோய், வாதமனல்  

கூசும் பீலகம் குதாங்கு நோய் – பேசிவையால்

என்னாங்காணிப்படிவம் ஏமமாம் செப்பி லென்ன

பொன்னாங்கானிக் கொடியைப்போற்று” – சித்தர் பாடல்

இக்கீரையில் இரண்டு வகையுண்டு. பச்சைப் பொன்னாங்கன்னி, சிகப்பு பொன்னாங்கன்னியாகும். இதில் பச்சைப்பொன்னாங்கன்னிக்கு மருத்துவகுணம் அதிகம். பருப்புடன் சேர்த்துண்ண தேகம் காந்தி பெறும். கண்கள் குளிர்ச்சி பெறும். விழிரோகங்களைப் போக்கும். வாததோஷம், உடல் சூடு, மூல ரோகம், கண்காசம், கண்புரைகள் இவை நீங்கும். தொடர்ந்து 40 நாட்கள் உண்டுவர கண் சம்பந்தப்பட்ட அனைத்து குறைகளையும் போக்கும். மாலைக்கண் நோய் குணமாகும். இக்கீரையுடன் பருப்பு, மிளகு சேர்த்து கடையல் செய்து அடிக்கடி சாப்பிட உடல் பருமன் குறையும்.

15 thoughts on “கீரைகள்”

Comments are closed.

Scroll to Top